ஸ்வதர்மம் என்றால் என்ன? அதன் முக்கியத்துவம் என்ன? (Swadharma Meaning in Tamil)
“நான் எப்படி என் உடன் பிறந்தவர்களையும், உறவுகளையும், நண்பர்களையும் கொல்வது?” என்று போர்க்களத்தில் நின்று போராடிக் கொண்டிருந்த அர்ஜுனனுக்கு, ஏன் கொல்ல வேண்டும் என்பதையும், கொல்ல விருப்பம் இல்லை என்றால் என்ன செய்ய வேண்டும் என்பதையும், கிருஷ்ணர் விளக்கிய வழியில், ஸ்வதர்மத்தின் பின் செல்வதன் முக்கியத்துவத்தை நமக்கு விளக்குகிறார் சத்குரு.

ஸ்வதர்மம் என்று அவர் சொல்லும்போது, ஸ்வ என்றால் சுயம், தர்மம் என்றால் சட்டம். அதாவது சுய சட்டம் அல்லது சுய விதிகள். அவர் சுயத்திற்கான சட்டங்களைப் பற்றி பேசுகிறார். சுயத்தின் இயல்பு என்ன? அது எவ்வாறு செயல்படுகிறது? நீங்கள் அதை வைத்து செய்ய வேண்டியது என்ன?
Subscribe
‘நீங்கள் சுயத்தின் சட்டங்களின்படி வாழவேண்டும், பொருள்நிலையின் சட்டங்களின்படி அல்ல’
எவ்வாறு பொருள்நிலைக்கு சட்டம் இருக்கின்றதோ அதேவிதமாக சுயத்திற்கும் சட்டம் இருக்கிறது. அவர் என்ன சொல்கிறார் என்றால், ‘நீங்கள் சுயத்தின் சட்டங்களின்படி வாழவேண்டும், பொருள்நிலையின் சட்டங்களின்படி அல்ல’. நீங்கள் பொருள்நிலையின் சட்டங்களின்படி வாழ்ந்தால் இது நிகழும் - இன்று நாம் நண்பர்களாக இருக்கிறோம். நாளை ஏதேனும் வந்தால் நாம் சண்டையிட்டுக் கொள்வோம், அப்படித்தானே? இல்லையா?
நீங்கள் அங்கே அமர்ந்திருக்கிறீர்கள், நான் இங்கே அமர்ந்திருக்கிறேன். இது நன்றாக இருக்கிறது. நீங்கள் இங்கே அமர முயற்சித்தால், அந்த இடத்தில் சண்டை வந்துவிடும், இல்லையா? இது உலகில் உங்களுக்கு இருக்கும் மிக நெருக்கமான உறவு நிலைகளில் கூட நிகழ்கிறதா இல்லையா? ஏதோ இரண்டு நாடுகளுக்கு இடையே மட்டும்தான் என்று அல்ல, இரண்டு சமூகங்களுக்கு இடையே மட்டும்தான் என்று அல்ல, இரண்டு குழுக்களுக்கு இடையே மட்டும் தான் என்று அல்ல. கணவன் மனைவிக்கு இடையே இது நிகழ்வதில்லையா? குழந்தைக்கும் தந்தைக்கும், அம்மாவுக்கும் குழந்தைக்கும், இது நிகழ்வதில்லையா? நிகழ்கிறது தானே? ஏனென்றால் இது பொருள்நிலையின் சட்டம். நீங்கள் அங்கே அமர்கிறீர்கள், நான் இங்கே அமர்கிறேன். எப்போதாவது ஒருமுறை நான் அங்கே வருகிறேன், நாம் இப்படி செய்துகொள்கிறோம். நமக்கு பிடித்திருந்தால், நாம் தழுவிக்கொள்கிறோம். ஆனால் நான் உங்களது தலை மீது வந்து அமர்ந்தால், அல்லது நீங்கள் என் தலை மீது வந்து அமர்ந்தால், அது அப்படி வேலை செய்யாது, இல்லையா? அப்படித்தானே?
இப்போது ஒரு பூச்சி பறந்து வந்து மீண்டும் மீண்டும் இங்கே அமர்கிறது. ஆரம்பத்தில் அது வெறுமனே இங்கே அமர்ந்தது, சிறிது நேரத்துக்கு பின் அது கடிக்கத் துவங்கியது. இப்போது என்ன செய்வீர்கள், சுக். நடக்கிறது இல்லையா? அது உங்கள் கையில் அகப்படாமல் போகலாம், அது வேறு விஷயம். ஆனால் அதை நீங்கள் எப்படியாவது பிடித்துவிடத் துடிக்கிறீர்கள் தானே? இதுதான் பொருள்தன்மையின் இயல்பு. அதனால் கிருஷ்ணர் சொல்கிறார், இதோ பார், பொருள்நிலையின் சட்டங்களின்படி நடந்தால், அர்ஜுனன் இடைமறித்து புலம்புகிறான், என்னால் எப்படி என் சகோதரனை கொல்ல இயலும், நான் எப்படி என் தாத்தாவை கொல்வேன், என்னால் எப்படி என் குருவை கொல்ல முடியும், அவர்கள் இந்த சண்டையில் எதிர்பக்கத்தில் இருக்கிறார்கள் என்பதற்காக? இப்போது கிருஷ்ணர் சொல்கிறார், “இதோ பார் நீ பொருள்நிலையின் சட்டங்களின்படி நடந்தால் நீ கொன்றாக வேண்டும். அவர்கள் தள்ளி இருந்தார்கள், நீயும் தள்ளி இருந்தாய், அப்போது ஒன்றும் பிரச்சனை இல்லை. இப்போது நாம் ஒருவர் இன்னொருவரின் பாதையில் குறுக்கிட்டுக் கொண்டுவிட்டோம். இதிலிருந்து இனி தப்பிக்க வாய்ப்பே இல்லை. இன்றோ அல்லது நாளையோ நீங்கள் கொல்ல வேண்டியிருக்கும். எனவே கொல்ல வேண்டிய தருணம் வந்துவிட்டது. நீங்கள் அதை நிறுத்த முடியாது; இது உங்கள் விருப்பமோ அல்லது அவர்களின் விருப்பமோ அல்ல, இது தான் பொருள்நிலையின் வழி.”
எல்லோருக்கும் வைத்திருக்கிறோம் எல்லை
பொருள்தன்மை எல்லைகளோடு நிகழ்கிறது. எல்லை மீறல் நிகழ்ந்தால்… மோதல் நிகழ்கிறது இல்லையா? எல்லோருக்கும் நீங்கள் ஒரு எல்லை வைத்திருக்கிறீர்கள் தானே? இல்லையா? உங்களது எதிரி என்றால் அவரது எல்லை அங்கே இருக்கிறது. அவர் அதை மீறினால் பிரச்சனை வரும். உங்களது பக்கத்து வீட்டுக்காரர் என்றால், அவருக்கு எல்லை எங்கே இருக்கிறது. அதை அவர் மீறி வந்தால் பிரச்சனை. உங்களது கணவரோ மனைவியோ என்றால் எல்லை இங்கே இருக்கிறது. அவர் அதை மீறி வந்தால் பிரச்சனை வந்துவிடுகிறது. உங்கள் குழந்தை என்றால், எல்லை இங்கே இருக்கிறது. ஆனால் அவர் அதைக் கடந்து வந்தால், பிரச்சனை வருகிறது இல்லையா?
அப்படியானால் எல்லோருக்கும் எல்லை வைத்திருக்கிறீர்கள், அப்படித்தானே? அவர்கள் உங்களுக்கு எவ்வளவு பிடித்தவர்கள் என்றாலும், அவர்களுக்கும் எல்லை இருக்கிறது தானே? எல்லை இருக்கிறதா, இல்லையா? எல்லை இருக்கிறது, இல்லையா. எல்லைகளை நாம் மதித்து நடந்தால் மட்டுமே, எல்லைகளை மதித்தால் மட்டுமே பொருள் உலகில் அனைத்து விஷயங்களும் சரியாக செயல்படும். நீங்கள் எல்லை தாண்டினால், ஏதேனும் அத்துமீறல் நிகழ்ந்தால் வன்முறை துவங்கிவிடும், இல்லையா? வன்முறையை நோக்கிய முதல்படி துவங்கிவிட்டது தானே? துவக்கத்தில் அது வார்த்தைகளில் நிகழும். பின்பு கொஞ்சம் தள்ளுமுள்ளு நடக்கும். பிறகு வெட்ட துவங்கிவிடுவார்கள். இல்லை, இல்லை, நான் எல்லாம் அப்படி செய்யமாட்டேன் என்று நினைக்காதீர்கள். நீங்களும் செய்வீர்கள். பொருள்நிலையின் வழி இதுதான்.
ஏன் ஸ்வதர்மம்?
எனவே கிருஷ்ணர் சொல்கிறார், உனக்கு இது வேண்டாம் என்றால், இந்த வெட்டும் தொழிலோடு உனக்கு போராட்டமாக இருக்கிறது என்றால், நீ உன் ஸ்வதர்மத்தை தொடர்ந்து செல். ஸ்வதர்மத்தில் எந்தவிதமான எல்லைகளும் கிடையாது. நீ இங்கே அமர்ந்து கொண்டு எல்லா இடத்திலும் இருக்கலாம். இங்கே அமர்ந்து கொண்டு எங்கேயும் இல்லாமலும் இருக்கலாம். அத்துமீறி வருபவர்கள் யாரும் இல்லை இங்கே. நீ இங்கே அமர்ந்திருக்கும் போது, நீ யாரையும் அத்துமீற முடியாது, அவர்கள் யாரும் உன்னிடம் அத்துமீற முடியாது, இதை நீ அனுபவத்தில் உணர்ந்தால், பிறகு நீ சண்டையிடாதே, போருக்கு செல்லாதே என்றெல்லாம் நான் உனக்கு சொல்லத் தேவை இருக்காது. ஆனால் நீ பொருள்நிலையின் சட்டங்களின்படி வாழ்ந்து கொண்டு, சண்டையிடுவதை தவிர்க்க முயற்சித்தாய் என்றால் அது வேலைக்காகாது. எப்படியும் நீ சண்டையிட்டு தான் ஆகவேண்டும். “அப்படியானால் நான் எப்படி ஸ்வதர்மத்தைத் தொடர்வது?” நீ உள்நோக்கிய பயணத்திற்கு திரும்ப வேண்டும். பொருள்தன்மையின் வழியில் நீ வாழ்ந்தால், நீ எப்போதும் மோதல்களுக்கு நெருக்கமாகத் தான் இருக்கிறாய், இல்லையா? அப்படித்தானே? எதனுடனாவது மோதிக்கொள்வது உனக்கு மிக அருகாமையில் தான் இருக்கிறது. எல்லா நேரமும் அதை நீ ஏதாவது செய்து தவிர்த்துக் கொண்டு இருக்க வேண்டும், இல்லையா? தவிர்க்கவில்லை என்றால் யாருடனாவது முட்டிக்கொண்டும் மோதிக்கொண்டும் இருப்பது உனக்கு தவிர்க்க இயலாததாக ஆகிவிடும். அதனால்தான் ஸ்வதர்மம்.